Monthly Archives: February, 2012

29th February 2012

அகத்தூய்மையே உங்கள் முதல் குறிக்கோளாக இருக்க வேண்டும். நல்ல காய்கறிகளும், உயர்ந்த மசாலாக்களும், உப்பும், உயர்வகைப் பருப்புகளும் உங்களிடம் இருக்கலாம். சமையல்காரரும் சமையல் கலையில் ஒரு வல்லுனராக இருக்கலாம். ஆனால் சமையல் செய்ய உபயோகப்படுத்தப்படும் வெண்கலப் பாத்திரத்தில் ஈயம் பூசப்படாமல் இருந்தால், அதனுள் உள்ள சாம்பார் அபாயகரமாக மாறிவிடும். அதனைச் சாப்பிட இயலாது. பாத்திரத்தின் உட்புறம் சமையல் செய்வதற்கு ஏற்றதாக இல்லாவிட்டால் சமைக்கப்பட்ட உணவு விஷமாக மாறிவிடும். அது போலவே நீங்களும் உங்கள் அகத்தினைத் தூய்மையாக வைத்துக் கொள்ள வேண்டும். ஸத்கர்மா (நற்செயல்கள்) மற்றும் ஸதாசாரம் (நற்பழக்கங்கள்), பிரார்த்தனையுடன் சேர்ந்து உங்கள் உணர்ச்சிகள், உத்வேகங்கள் மற்றும் உள்ளுணர்வுகளைக் கொண்டப் பாத்திரம் போன்ற உங்கள் இதயத்தின் உள்ளே ஒரு பூச்சாக செயல்படும். எவ்வாறு ஒரு மதம் கொண்ட யானை அடக்கப்பட்டு சர்க்கஸ் அரங்கில் வித்தைகள் செய்யப் பழக்கப்படுகிறதோ அவ்வாறே பிரார்த்தனையும் உள்ளுணர்வுகளை அடக்கும்.

– தெய்வீக உரை, பிப்ரவரி 25, 1965

28th February 2012

ஞானம் என்கிற சொல்லிற்கு ஆன்மீக அனுபவமுள்ளவர்களிடம் விசாரம் செய்வதன் மூலம் ஆத்ம தத்துவத்தை உணர உள்ள ஆர்வம் என்றும் பொருள் உள்ளது. இந்த ஞானத்தையோ அனுபவத்தையோ அடைய உங்களுக்கு ஆர்வமிருந்தால் தம்மை உணர்ந்த ஆன்மாக்களிடம் சென்று அவர்களின் அருளைப் பெறுங்கள். அவர்களது மனப்பாங்கையும், ஒழுக்கத்தையும் கவனித்து, அவர்களிடம் உதவி கேட்பதற்கு ஒரு சந்தர்ப்பத்தை அடைய காத்திருங்கள். உங்களுக்கு குழப்பம் எழும்போது, அவர்களை அமைதியாகவும் தைரியமாகவும் அணுகுங்கள். எவ்வளவு கடல் நீர் இருந்தாலும் ஒருவரது தாகத்தை ஆற்ற முடியாது. அதேபோல, எவ்வளவு மணி நேரம் ஆன்மீகப் புத்தகங்களைப் படித்தாலும் உங்கள் குழப்பங்களை சரிபடுத்த முடியாது. ஆன்மீக அனுபவமுள்ள பெரியோர்களிடமிருந்தும், அவர்கள் மூலமாகவும் தான் ஞானத்தை அடைய முடியும். அவர்களுக்கு சேவை செய்து அவர்களது அன்பினைப் பெறுங்கள். அதன்பிறகுதான் அந்த விலைமதிக்கமுடியாத ஞானத்தைப் பெறமுடியும்.

– கீதா வாஹினி அத்தியாயம் 10

27th February 2012

 

அனைத்து ஜீவாராசிகளும் தெய்வீகமே, கடவுள் அவர்களின் இதயத்தில் உள்ளார். ஆயினும் இவர்கள் பந்தப்பட்டு, மகிழ்ச்சியற்று, குறுகி, பலஹீனமாக, குழப்பத்தில் உழல்கிறார்கள். ஏன்? இவ்வாறாக கற்பனைசெய்துகொண்டு, அதனால் அவர்களின் கற்பனையின் ஊற்றாகிய மனதினால் வடிவேற்றப்படுகிறார்கள். தங்களது உண்மையை அறியாமல் இருக்கிறார்கள். இந்த மாயையிலிருந்து அவர்கள் எவ்வாறு விடுபடமுடியும்? ஒரு இரயில் வண்டியை நீங்கள் கடக்கவேண்டுமானால், ஒரு காரில் வேகமாகப் பயணிக்கவேண்டும் அல்லது ஒரு விமானத்தில் ஏறவேண்டும். இரயில் வண்டியைவிட மெதுவாக செல்லும் வண்டி அதற்கு உதவாது. அதேபோல, உங்கள் மனக்குழப்பத்தைக் கடப்பதற்கு, நீங்கள் உங்களை தெய்வத்துவத்துடன் சேர்த்து வைக்க வேண்டும். மனதினால் ஏற்பட்ட மானவ (மனித) சக்தியின் குழப்பம் தெய்வசக்தியினால் மட்டும்தான் கடக்கப்பட முடியும். தெய்வசக்தியை அடைவதற்கு வழிவகுக்கும் ஒரு பிரார்த்தனையே காயத்ரி மந்த்ரம் ஆகும்.

– தெய்வீக உரை, பிப்ரவரி 25, 1965

26th February 2012

பரிசுத்த மன அலைகள் கொண்டு ஆத்ம லிங்கத்திற்கு அபிஷேகம் செய்யுங்கள். எது உண்மையான யக்ஞம்? சேர்த்து வைத்துள்ள செல்வத்தை தானம் செய்தலே செல்வத்தினால் செய்யப்படக்கூடிய யக்ஞமாகும். மொத்த உடல் மற்றும் மனதின் செயல்களை ஆன்மீக சாதனைக்கு உபயோகப்படுத்தலே தபோ யக்ஞமாகும். கர்மாவை செய்தும் அதனால் பந்தப்படாமல் இருந்தால், அதுவே யோக யக்ஞமாகும். சித்தம் எனப்படும் மனம் ஒரு திசையிலும் புலன்கள் வேறொரு திசையிலும் செல்லும்பொழுது , அந்த நபர் இரட்டிப்பு குழப்பத்திற்கு ஆளாகிறார். அதனால் பந்தத்தை தூர விலக்குங்கள். நீங்கள் இதை அடைந்தால் உங்களின் ஒவ்வொரு செயலும் யக்ஞமாகிறது. நீங்கள் எதைப் பேசினாலும் அதுவே புனிதமான மந்திரம் ஆகிவிடும். நீங்கள் உங்கள் கால்களை எங்கு பதித்தாலும் அந்த இடத்தையே புனிதமாக்கிவிடும்.

– கீதா வாஹினி அத்தியாயம் 10

25th February 2012

வேற்றுமையில் ஒற்றுமை பாராட்டுதலே அனைத்து மனித முயற்சிகளின் குறிக்கோள் ஆகும். இதை அடையாமல் ஒருவனால் அமைதியைப் பெறமுடியாது. எவ்வளவு முறை சாந்தி மந்திரத்தை ஜபம் செய்தாலும் அது இதைக் கொடுக்காது. ஒரே மின்சாரமே விதவிதமான கருவிகளான குமிழ் விளக்கு (பல்ப்), ஒலிவாங்கி (மைக்), மின்விசிறி (பேன்), குளிர்சாதனப்பெட்டி (பிரிட்ஜ்), ஒலிப்பதிவுக் கருவி (டேப்ரிகாடர்), மின்சார அடுப்பு ஆகியவற்றை இயக்குகிறது. குருதான் இந்த கண்ணுக்குப் புலப்படாத இந்த மின்னோட்டத்தை உங்களுக்கு வெளிப்படுத்துகிறார். எவ்வாறு ஒரு அந்நியர் ஒரு ஏழையின் வீட்டினுள் நுழைந்து, வீட்டினடியில்  தோண்டி எடுத்து சொந்தம் கொண்டாடும் வகையிலுள்ள ஒரு அரிதான பொக்கிஷம் இருப்பதை அறிவிக்கிறாரோ அவரைப் போன்றவரே குரு. அந்த குரு உங்கள் நன்றிக்கு தகுதியானவராக இருக்கிறார்.

– தெய்வீக உரை, பிப்ரவரி 25, 1965

24th February 2012

ஆன்மாவின் ஸ்வரூபமும், இயற்கையும் நிலையில்லாத எந்த பொருளினாலும் பாதிக்கப்படாமலும், தாக்கம் அடையாமல் இருப்பதற்கும் ஏற்றவாறு உள்ளது. ஆன்மாவிற்கு பிறப்போ இறப்போ, பசியோ தாகமோ, துக்கமோ கலக்கமோ இல்லை. பிறப்பும் இறப்பும் உடலின் தன்மைகள், துக்கமும் கலக்கமும் மனதின் நோய்கள். இவற்றிற்கு எவ்வித முக்கியத்துவமும் அளிக்காதீர்கள். நீங்களே அந்த பரமாத்மா என்பதை தெரிந்துகொள்ளுங்கள். நீங்கள், சிறுதுளைகளால் ஆன காகிதமானது எவ்வாறு எந்தப் பொருளினுடன் தொடர்பு ஏற்பட்டாலும் கெட்டுவிடுவதைப் போல் இருக்காதீர்கள். சம்சாரமாகிய (அதாவது உலக வாழ்க்கையாகிய) சகதியாக உள்ள ஏரியில் உள்ள தாமரை இலை போல இருங்கள். உங்களைச் சுற்றியுள்ள மண்ணினால் கறைபடாமல் இருங்கள். உலகில் இருங்கள் ஆனால் அதன் வெளிப்புறத்தில் இருங்கள்.

– கீதா வாஹினி (அத்தியாயம் 10)

23rd February 2012

உங்கள் பெற்றோர்கள் உங்களுக்கு இந்த உடலை வழங்கியிருந்தாலும், குருதான் உங்களுள் உறைபவரை சுட்டிக்காட்டுகிறார். ஆபரணம் செய்வதற்கு ஏற்றதாக தங்கத்தை மாற்றுவதற்கு சிறிதளவு வெள்ளியும் செம்பும் சேர்க்கப்படுகிறது. அதுபோலவே இயற்கையின் பன்முகத்தன்மையை வெளிப்படுத்த பிரம்மதத்வம் (அதாவது தெய்வீக சாரம்), சிறிதளவு அஹங்காரம் அதாவது ‘நான்’ என்கிற உணர்வு, மற்றும் மமகாரம் அதாவது ‘எனது’ என்கிற உணர்வு, சேர்க்கப்பட்டு ஒரு உலோகக்கலவையாக மாற்றப்படுகிறது. குருவானவர் ஸ்ரவணம், மனனம் மற்றும் நிதித்யாஸனம் (அதாவது தெய்வத்தின் புகழைக் கேட்டல், உள்வாங்குதல் மற்றும் தியானித்தல்) மூலம் ஒருவரது புனிதமான, கலப்படமில்லாத நிலையை மீண்டும் பெற கற்றுத்தருகிறார். இந்த வழிமுறை மூலமாக (ஜீவாத்மாவாகிய) தானும், (பரமாத்மாவாகிய) கடவுளும் ஒன்றே என்பதையும் மேலும் இவை ஒரே பொருளின் வெவ்வேறு அம்சம் என்பதையும் ஒருவர் புரிந்துகொள்ளலாம்.

– தெய்வீக உரை, பிப்ரவரி, 25, 1965

22nd February 2012

ஞானி எப்பொழுதும் மகிழ்ச்சியாக இருக்கிறான். புறப்பொருள்களின் மீது இந்த மகிழ்ச்சி சார்ந்து இருப்பதில்லை. உங்களுக்கு இது ஆச்சரியமாக இருக்கலாம். இது ஏனென்றால் அப்படிப்பட்ட மக்கள் தமக்கு நல்லதோ கேட்டதோ எது நேர்ந்தாலும் திருப்தியாக இருக்கிறார்கள். ஏனெனில் ஆண்டவனின் சங்கல்பம் தான் மேலோங்கி இருக்கும் என்பதில் திட நம்பிக்கை கொண்டுள்ளனர். இந்த திருப்தி இல்லாமல் இருப்பது அஞ்ஞானியின் அறிகுறி. அஞ்ஞானியானவன் ஒரு ஆசையின் மேல் இன்னொரு ஆசையை அடுக்கிவைத்து, ஒரு திட்டத்திற்குப் பிறகு இன்னொரு திட்டம் என செய்து என்றென்றும் ஏங்கிக் கொண்டிருக்கிறான். அவர்கள் கவலைபட்டுகொண்டு தமது இதயங்களில் பொறாமைத் தீயை வளர்த்துக் கொள்கிறார்கள். ஆனால், ஞானியோ தடுமாற்றம் இல்லாமல், நிதானமாக எப்பொழுதும் உற்சாகத்துடன் இருக்கிறார்! ஞானிகள் பல்வேறு செயல்களில் ஈடுபட்டிருந்தாலும் சிறிதளவு கூட அவற்றால் பாதிக்கப்படுவதில்லை. ஏனெனில் அவர்களுக்கு தமது செயல்களின் பலன்கள்மேல் எவ்வித நோக்கும் இல்லை.

– கீதா வாஹினி (அத்தியாயம் 10)

21st February 2012

மழை பெய்யும் பொழுது விதைகள் விதைக்கப்படாமல் இருந்தால், வயலில் பயிர் ஏதேனும் இருக்குமா? விதைகள் விதைக்கப்பட்டு மழை இல்லை என்றால், சாகுபடி இருக்குமா? அறுவடை செய்வதற்கு மழையும் விதையும் இரண்டுமே தேவைப்படுகின்றன. இதுபோல, தெய்வ அருளும் மனித முயற்சியும் இருந்தால்தான் பலன் கிடைக்கும். மனதில் நல்ல எண்ணங்கள் இருந்தால், நற்செயல்களில் அவை பிரதிபலிக்கும்; எண்ணங்கள் தீயவையாக இருந்தால் அவற்றின் பலன்களும் அதுபோலவே தீயதாக இருக்கும். வெவ்வேறு பக்தர்கள் அவரவர்கள் கடவுளை வழிபடும் முறை நிச்சயமாக வெவ்வேறாகத்தான் இருக்கும். ஆனால், எந்த முறையானாலும், ஒருமுகப்படுத்திய பக்தி இருக்க வேண்டும். கடவுளிடம் செலுத்தப்படும் அன்பே பக்தியாகும். உலகத்தை நோக்கி செலுத்தப்படும் அன்பு பற்றாகும். கடவுளின் மேல் அன்பினை வளர்த்துக்கொள்ளுங்கள்.

– தெய்வீக உரை மார்ச் 2, 1992

20th February 2012

சிவராத்திரி தினத்தன்று ஒவ்வொருவரும் மனதிற்கும் தெய்வத்திற்கும் இடையே நட்பு ஏற்படுத்த முயற்சி எடுக்கிறார்கள். ஒரே தெய்வீகம் தான் அனைத்திலும் நிறைந்திருக்கிறது என்பதையும் அனைத்து இடங்களிலும் காணப்படுகிறது என்பதையும் சிவராத்திரி உணர வைக்கிறது. சிவன் கைலாயத்தில் வசிப்பதாகக் கூறப்படுகிறது. ஆனால் அது எங்கே இருக்கிறது? கைலாயம் என்றால் சந்தோஷம் மற்றும் ஆனந்தம் என்று பொருள். கடவுள் சந்தோஷமும் மகிழ்ச்சியும் நிரம்பிய மனதில் வசிக்கிறார் என்று பொருள். எவ்வாறு மகிழ்ச்சியைப் பெறமுடியும்? நாம் தூய்மையும், உறுதியும், புனிதத்தன்மையையும் வளர்த்துக்கொண்டால் அது நமக்குக் கிடைக்கும். இதன்பிறகு, இதயம் அமைதி மற்றும் ஆனந்தத்தினால் நிரம்பி இருக்கும் கடவுளின் கோயிலாக மாறிவிடும். வருடத்தில் ஒருமுறை, சிவராத்திரியன்று மட்டும் கடவுளை நினைத்தால் போதாது. ஒவ்வொரு நாளும், ஒவ்வொரு இரவும், ஒவ்வொரு நிமிடமும் நீங்கள் தெய்வத்தை நினைத்து உங்கள் நேரத்தை புனிதப்படுத்துங்கள். நீங்களே அந்த சிவன், அந்த தெய்வீகம். உங்கள் உண்மைத் தன்மையாகிய இந்தத் சிவ தத்துவத்தை அறிந்து உணர முயற்சி செய்யுங்கள்.

– தெய்வீக உரை பிப்ரவரி 17, 1985