Tag Archives: gnana

8th March 2012


முனைப்புடன் கூடிய நிலையான நம்பிக்கை ஞானத்தை அடைவதற்கு தேவையானதாகும். அதனுடன் கூடி, உங்களுக்கு குருவின் உபதேசங்களை கிரகிப்பதற்கு ஆழ்ந்த ஏக்கம் இருக்க வேண்டும். விழிப்புடன் இருங்கள். சோம்பேறித்தனத்திற்கோ ஒவ்வாமலோ ஊக்கம் அளிக்காமலோ இருப்பவற்றிற்கோ பணியாதீர்கள். அப்படிப்பட்ட கெட்டத் தாக்கங்களில் இருந்து தப்பிப்பதற்கு புலன்களின் மேல் உங்களுக்கு ஆதிக்கம் தேவை. நம்பிக்கையின்மையோ நிலையாமையோ சந்தேகம் என்கிற விஷத்தைவிட அழிவு ஏற்படுத்துவதில்லை. சந்தேகம் அறியாமையிலிருந்து பிறக்கிறது; உங்கள் இதயத்தினுள் ஊடுருவி, அங்கே தழைக்கிறது. அனைத்து விபரீதங்களுக்கும் மூலமாக இருக்கிறது! பலனின் மேல் உள்ள ஆசையை விலக்கி, முழு நம்பிக்கையுடன் எழுச்சி கொண்டு, உங்கள் தினசரி நடவடிக்கைகளில் ஈடுபடுங்கள். அதன்பிறகு, நீங்கள் ஞானத்தை அடைந்து, மோக்ஷம் பெறுவீர்கள்.

– கீதா வாஹினி, அத்தியாயம் 11

7th March 2012

இந்த உலகம் “நான்” என்கிற ஒரு பலமான தூணின் மேல் கட்டப்பட்ட ஒரு கட்டமைப்பாகும். உங்களின் ஆழ்ந்த உறக்கத்தின் போது இந்த “நான்” செயலற்று இருப்பதனால் உங்களைப் பொருத்தவரை உலகமே இல்லை. அது போலவே, நீங்கள் பிறப்பதற்கு முன்பும், இறப்பதற்குப் பின்பும், எந்த உலகமும் உங்களுக்கு ஞாபகம் இருப்பதில்லை. இந்த ஞானத்தைப் பெற்று அதனில் இருப்பதற்கு, உங்களை ஆயத்தம் செய்பவையான கர்மா (செயல்) மற்றும் ஆழ்ந்த சிந்தனை ஆகியவற்றைக் கடைப்பிடிக்க வேண்டும். உங்கள் இதயத்தை அஹங்காரத்தின் தாக்குதல்களிலிருந்து தூய்மையாக்க கவனத்துடன் செய்யும் கர்மா உதவும். உங்கள் கவனத்தை முழுதளாவிய பூரணமான அந்தப் பரம்பொருளின் மேல் வைக்க ஆழ்ந்த சிந்தனை உதவும். அதன்பின் ஞானம் வெளிப்பட்டு என்றென்றும் உங்களுள் இருக்கும். நீங்கள் அந்த ஞானத்தை வென்றபின், வேறெதுவும் அறிவதற்கு இல்லாததால் பேரறிவாளிக்கு சமமாகிறீர்கள்.

– தெய்வீக உரை, மார்ச் 3, 1965

6th March 2012

உண்மையான கழிவிரக்கம் (தான் செய்த குற்றங்களை எண்ணி வருந்துவது) மட்டுமே உங்கள் பாவத்தை புனிதமாக மாற்றப் போதுமானது. கடவுள் மிகுந்த அருளுடன் அந்த கழிவிரக்கத்தை ஏற்றுக்கொண்டு அவரது ஆசிகளைப் பொழிகிறார். ஞானம் உதிக்கும் வரையிலும் பாவச் செயல்களில் ஈடுபட்டுக்கொண்டிருந்த கொள்ளையன் இரத்னகாரன், அந்த கழிவிரக்கத்தால் தான் புனிதன் ஆனான் இல்லையா? அவன் (இராமாயணம் என்கிற இதிகாசத்தை இயற்றிய) வால்மீகி மகரிஷியாக மாறினான் இல்லையா? அவனது சரித்திரம் கழிவிரக்கத்தின் மதிப்பிற்குச் சான்றாக விளங்குகிறது. பாவத்தின் விளைவிலிருந்து விடுபட்டால் மட்டும் போதுமா என நீங்கள் கேட்கலாம். புண்ணியத்தின் விளைவுகளையும் விட்டுவிட வேண்டும் அல்லவா? ஆமாம், அவ்வாறே செய்யவேண்டும். தனது வழியின் குறுக்கே வரும் அனைத்தையும் எவ்வாறு கர்ஜிக்கும் காட்டுத்தீ சாம்பலாக்கிவிடுமோ, அவ்வாறே வலிமையான ஞானத்தீயும் அனைத்து பாவங்களையும் புண்ணியங்களையும் விழுங்கி அழித்துவிடும்.

– கீதா வாஹினி, அத்தியாயம் 11

28th February 2012

ஞானம் என்கிற சொல்லிற்கு ஆன்மீக அனுபவமுள்ளவர்களிடம் விசாரம் செய்வதன் மூலம் ஆத்ம தத்துவத்தை உணர உள்ள ஆர்வம் என்றும் பொருள் உள்ளது. இந்த ஞானத்தையோ அனுபவத்தையோ அடைய உங்களுக்கு ஆர்வமிருந்தால் தம்மை உணர்ந்த ஆன்மாக்களிடம் சென்று அவர்களின் அருளைப் பெறுங்கள். அவர்களது மனப்பாங்கையும், ஒழுக்கத்தையும் கவனித்து, அவர்களிடம் உதவி கேட்பதற்கு ஒரு சந்தர்ப்பத்தை அடைய காத்திருங்கள். உங்களுக்கு குழப்பம் எழும்போது, அவர்களை அமைதியாகவும் தைரியமாகவும் அணுகுங்கள். எவ்வளவு கடல் நீர் இருந்தாலும் ஒருவரது தாகத்தை ஆற்ற முடியாது. அதேபோல, எவ்வளவு மணி நேரம் ஆன்மீகப் புத்தகங்களைப் படித்தாலும் உங்கள் குழப்பங்களை சரிபடுத்த முடியாது. ஆன்மீக அனுபவமுள்ள பெரியோர்களிடமிருந்தும், அவர்கள் மூலமாகவும் தான் ஞானத்தை அடைய முடியும். அவர்களுக்கு சேவை செய்து அவர்களது அன்பினைப் பெறுங்கள். அதன்பிறகுதான் அந்த விலைமதிக்கமுடியாத ஞானத்தைப் பெறமுடியும்.

– கீதா வாஹினி அத்தியாயம் 10