Tag Archives: studenthood

4th March 2012

அர்ஜுனனுக்கு எது பயனுள்ளதோ அதனையே கிருஷ்ணர் போஷித்தார். அர்ஜுனனின் மதிப்பு, ஆத்மானந்தம் மற்றும் தர்மத்தின் மீது முழுக் கவனமும் செலுத்தினார். அர்ஜுனனைத் தனது உயிர்மூச்சாகவே எண்ணி போஷித்துக் காப்பாற்றினார். ஒருவர் எவ்வாறு தமது கண்கள் மற்றும் இதயத்தைக் காக்கிறார்களோ அவ்வாறே அவர் அர்ஜுனனைக் காத்தார். அவ்வாறாக அவனுக்கு புனிதமான விஷயங்களைக் கற்பித்து, அவனிடம் மாற்றத்தை உண்டு செய்தார். எவ்விதமும் ஒப்பிடமுடியாதபடியாக கிருஷ்ணர் அர்ஜுனனை நேசித்தார். அதுவே உண்மையான குருவின் இயல்பாகும். அர்ஜுனனும் சாதாரணமானவன் அல்ல. அவன் கிருஷ்ணரைப் பணிந்து வணங்கி, அவரிடமிருந்துப் பெற்ற பணிகளைத் நேர்மையாகக் கடைப்பிடித்தான். எப்படிப்பட்ட நெருக்கடி இருந்தாலும் கிருஷ்ணரின் ஆணையையும் சொல்லையும் தவறாமல் கடைப்பிடித்தான். அந்த ஆண்டவனுடனான தோழமையை, துன்பங்களிலிருந்து தன்னைக் காக்கும் கவசமாக, தான் வசிக்கும் உடலாக, தான் போஷித்து பலப்படுத்திக் காக்க வேண்டிய ஒரு வஸ்துவாக அணிந்திருந்தான். இவ்வாறு தான் குருவும் சீடனும் இணைந்து இருக்கவேண்டும்.

– கீதா வாஹினி, அத்தியாயம் 11

2nd March 2012

உங்களது குருவை மகிழ்ச்சிப்படுத்தி, அவரது உபதேசங்களைக் கடைப்பிடித்தும் அவருக்குப் பணிவிடை செய்தும் அவரது நல்லெண்ணத்தை வெல்ல வேண்டும். ஆன்மீகப் பயிற்சிகள், உயர்ந்த குணங்கள் மற்றும் அமைதியான சுற்றுப்புறம் ஆகியவற்றால் தீண்டப்படாத வாழ்க்கை வாழ்பவர்கள் எங்கிருந்தாலும், அவர்களுக்கு குருவின்மேல் சிறிதளவு நன்றி இல்லை என்பதை உணர்த்துகிறது. அவர்கள் கிருஷ்ணார்ப்பணம் (கடவுளுக்கு அர்ப்பணம்) என்று சொல்லலாம். ஆனால் அவர்களது செயல்கள் தேஹார்ப்பணத்தை (உடலுக்கு அர்ப்பணம்) தான் நிரூபிக்கின்றன. குருவின் அருளைப் பெறுவதற்கு உங்களது நடத்தையை மாற்றிக்கொள்ளுங்கள். அதன்பிறகு, ஞானமும் ஆனந்தமும் உங்களுடையவையாகிவிடும். ஆனால் அதற்கு பதில் உங்கள் அஹங்காரத்தினாலும் நம்பிக்கையின்மையாலும் நீங்கள் கீழ்ப்படியாமல் விமர்சித்துக்கொண்டு இருந்தீர்களானால் உங்களுக்கு உண்மையின் காட்சி அருளப்படாது. எவ்வாறு பசு தன் கன்றுக்குட்டியை அருகில் அழைக்கிறதோ அவ்வாறே குருவும் தனது சீடரை அருகில் அழைத்து அருள் மற்றும் ஆனந்தமாகிய பாலை அளிக்கிறார். சீடர் மெச்சத்தக்க குணம் பொருந்தியவராக இருக்கவேண்டும். அதன்பிறகு எவ்வாறு சுத்தமான இரும்புத்துண்டு காந்ததினால் ஈர்க்கப்படுகிறதோ, தானாகவே அவருக்கு குருவின் ஆசிகள் கிடைக்கும்.

– கீதா வாஹினி, அத்தியாயம் 10